May 22, 2020

நம்மை நாமே உரசிப்பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

நம்மை நாமே தனிமையில் உரசிப்பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:

1- சொந்த காலில் நிற்க வேண்டும்:-

தந்தை, தாய், சகோதரர், சொந்தம், நண்பர்கள் என மற்றவர்களிடம் எந்த வித உதவியும், தயவும் இல்லாமல்,
உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
உங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள்,
உங்களுக்கு செய்வது, தயவோ, உதவியோ, ஒத்தாசையோ அல்ல.
அது, அவர்கள் உழைத்துப் பெரும் ஊதியத்துக்கான ஊழியம்.
இறைவன் ஒருவனைத் தவிர,
யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

2- இறைவனின் அளப்பரிய படைப்புக்களை செலவு செய்து, பயணம் செய்து அறிந்து கொள்ளுங்கள்:-

குறைந்தபட்சம் பக்கத்தில் இருக்கும்,
இந்தியா, மாலத் தீவு, சிங்கப்பூர், மலேஷியா, சீனா, இலங்கை சென்று பார்த்து வர வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம், உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெரிய அளவு அது  உதவும்.

3- ஆர்வம்:-

ஆர்வம் என்பது உங்களின் வேலையை குறிப்பது.
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு வேலையில் நீங்கள் நிர்பந்தத்தால் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், 30 வயதுக்குள்ளாகவாவது உங்களுக்கு பிடித்த துறையில், வேலையில், தொழிலில் சேர்ந்து விட வேண்டும்.

4- தோல்வி:-

தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்றுக் கொள்ளவே முடியாது.
தோல்வி என்பது உங்களை ஒழுங்கு படுத்தும் மிகச் சிறந்த ஆசான்.
வாழ்வில் ஒரு முறையாவது,
ஒரு தோல்வியையாவது நீங்கள் கண்டிப்பாக சந்தித்து இருக்க வேண்டும். இல்லையேல், 
30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை சரியான முறையில் கையாள முடியாமல் தவிக்கும் நிலை உங்களுக்கு ஏற்படலாம்.

5- முதலீடு:-

சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில்,வட்டி சம்பந்தப்பட்டது இல்லாமல், வேறு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து வைத்து விட வேண்டும்.
அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்கு அவசியத்திற்கும், அவசரத்திற்கும், பிரதி உபகாரத்தை எதிர் பார்க்காமல், உதவுவது கூட மிகப் பெரிய சேமிப்பாகும். இது உங்களுடைய கடமையும் கூட.

6- தீய பழக்கங்கள்:-

கெட்டப் பழக்கங்கள் சிறு வயதிலும், பிராயத்திலும், சுற்றி இருப்பவர்களால் ஏற்படுவது இயற்கை. அவைகளை கண்டறிந்து 30 வயதுக்குள் கண்டிப்பாக நிறுத்தி  விட வேண்டும்.
கேலி, கிண்டல், குத்தல், நக்கல், வசவு, நையாண்டி எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.
ஏனெனில், தூய்மையான நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

7- உண்மையான நட்பு:-

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும்,
எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும்,
உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை அவசியம்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,
உண்மையான தோழமை,
அமைத்துக் கொள்ள வேண்டும்.

8- பிடிக்காவிட்டால் பிரிந்து விடுங்கள்:-

ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா?
உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும்,
சகித்துக் கொண்டு,
பொருத்துக் கொண்டு,
விட்டுக் கொடுத்துக் கொண்டு, இருக்கிறீர்களா?
வேண்டவே வேண்டாம்.
முற்றிலுமாக பிரிந்து விடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு,  இனி நீங்கள் பயணம் செய்வது தான் உங்களுக்கும் நல்லது.
உங்களின் குடும்ப வாழ்வுக்கும் நல்லது.

சதா சர்வ காலமும் உங்களோடு நட்போடு இருப்பதாக காட்டிக் கொண்டு, எப்போதுமே குத்திக்காட்டி, பேசுபவரை இனம் கண்டு ஒதுங்கி விடுங்கள்.
அவர்களின் உள்ளத்தில், உங்களை பற்றி, வஞ்சகமும், பொறாமையும், சூதும் குடி கொண்டிருக்கும்.
அவர்களின் நிலையை, அவர்கள் அறிய மாட்டார்கள்.

இறைவன் உங்களுக்கு அவர்களை எந்த வகையிலாவது அடையாளப் படுத்தி விடுவான். அவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் பழகுவதை விட, ஒதுங்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.
நம்மை நழ்வழியில் ,
முன்னேற்றப் பாதையில்
நம்பிக்கை ஊட்டக்கூடிய,
தோழமையும் எப்போதும் அவசியம்.

9- கைதேர்ந்தவர் என்ற நல்ல பெயர்:-

நீங்கள் எந்த பணி செய்தாலும், அந்தப்  பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும்.
அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நான்கு பேர் கூற வேண்டும்.

10- ஆராய்ந்து செயல்படுதல்:-

கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை.
மனிதர்களை ஆராய்ந்து, பகுத்தறிந்து செயல் படுபவர்களும் மிகச் சிறந்த ஆராய்ச்சியாளரே. 

11- நேரம் பொன் போன்றது:-

நேரத்தை கணக்கிட்டு செலவு செய்ய வேண்டும்.
30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது என்பது,
உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் இழப்பாக அமையும்.

12- ஒற்றுமை:-

ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள்.
ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல,
பணியிடம், மற்றும் வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இது உங்களை பல நிலைகளில் உயர்த்த உதவும்.

13- நீங்கள் நீங்களாகவே இருங்கள்:-

மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக மட்டுமே வாழ வேண்டிய தருணம் இது.

14- படிப்பில் அல்லது அனுபவத்தில் உயரம்:-

உங்கள் துறை சார்ந்த படிப்பில்,
அல்லது அனுபவத்தில், நீங்கள்
முழுமை அடைந்திருக்க வேண்டும்.
பி.எச்.டி முடித்தால்தான் முழுமை அடைந்து விட்டோம் என்றில்லை.
இன்றைய காலத்துக்கு ஏற்ப அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.        
                 
உரசிப் பார்த்து விட்டீர்களா??
அடிக்கடி இதை செய்யுங்கள்..

மொபைல் போனுக்கு சார்ஜ் செய்வது போல எப்போதும் உங்கள் நிலை இறங்காமல் பார்த்து வாழுங்கள்..

மகிழ்ச்சியான வாழ்வு,
நோய் நொடி இல்லாத வாழ்வுதான்..

சிரிங்க.. சிரிங்க..
குறைந்த பட்சம் புன்முறுவலாவது பூத்திருங்கள்..

No comments:

Post a Comment