Nov 2, 2015

யாசர் அரபாத்தின் வரலாற்று குறிப்பு

அரை நூற்றாண்டாக பாலஸ்தீனப் போராட்டத்தின் சின்னமாக விளங்கி, காலமான யாசர் அரபாத்தின் நீண்ட அரசியல் பயணம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
யாசர் அரபாத் வாழ்க்கைக் குறிப்பு
யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு
பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகிவிட்டார். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபாத்தின் தந்தையார் கொல்லப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட அரபாத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார்.

1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார்.

1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்ட போதும், அரபாத் அவற்றை விவாதிக்க விரும்பவில்லை, மாறாக 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார்.

தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று அரபாத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.

1982-ஆம் ஆண்டு, அப்போது இஸ்ரேலிய ராணுவ அமைச்சராக இருந்த ஷரோன், லெபனானில் இருந்த பாலஸ்தீன நிலைகள், அகதி முகாம்கள்மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அரபாத், லெபனான் நாட்டிலிருந்து வெளியேறி த்யூனிசியா நாட்டுக்குச் சென்று தஞ்சம் பெற்று வாழ நேர்ந்தது.

ஆனால், 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் "இன்டிபாடா" என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ரபினுடன் அரபாத் கைகுலுக்கினார்.

சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலஸ்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன.


சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ரபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை.

மேற்குக் கரை ரமல்லா திரும்பி பாலஸ்தீன நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த அரபாத், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலஸ்தீனர்களின் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக, அரபாத்தின் ரமல்லா வளாகத்தை இஸ்ரேல் முற்றுகை இட்டிருந்தது. பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வற்ற நிலைதான் இன்னும்.

2004 இல் அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பாலஸ்தீனர்களின் பிரதான தலைவராக இருந்து வந்த யாசர் அரபாத் மீது, இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவிர, வேறு பல குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தன. முக்கியமாக, பாலஸ்தீன நிர்வாக அமைப்பின் மீது சர்வாதிகாரம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அரபாத்தின் வாழ்க்கை, பல காலம், நாடுவிட்டு நாடுசென்று வாழ்வதாகவே அமைந்தது. ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளில் வாழ்ந்தபோது, பல முறை இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் தீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர் அரபாத் என்கிறார்கள் அவருடன் இருந்த பாலஸ்தீனத் தலைவர்கள். 1992-ஆம் ஆண்டு லிபியா நாட்டில் அரபாத் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது, அப்போது பதினைந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் அரபாத் மீட்கப்பட்டார். தம் வாழ்க்கையின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய முற்றுகையில் கழிக்க நேரிட்டதும் முக்கியம்.


யாசர் அரபாத், ஒரு தீவிரப் போராளியாக இருந்த போது, தம்முடைய நடமாட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். 1990-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமான செய்தி கூட, ஓராண்டு ரகசியமாகத் தான் இருந்தது. சுஹா என்ற பாலஸ்தீனப் பெண்மணியை அரபாத் மணந்திருந்தார்.

இவர்களுக்கு, ஸஹ்வா என்ற மகளும் உண்டு.

அரபாத் போன்று உலகறிந்த பாலஸ்தீனத் தலைவர்கள் இல்லாத நிலையில் அவருடைய மரணத்தை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னையின் ஒரு பெரும் சகாப்தம் நிறைவடைந்து, அடுத்த காலகட்டம் துவங்குவதாகவே கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அராபத் கடந்து வந்த பாதை

ஆக. 4, 1929:எகிப்தின் கெய்ரோவில் பிறந்தார். இவரது தந்தை பெயர் அப்துல் ரவூப் அல் குத்வா அல் ஹுசேனி. பாலஸ்தீன வியாபாரி

1949: பாலஸ்தீன மாணவர் அமைப்பு தொடக்கம்

1965 ஜன. 1: பதா கொரில்லா இயக்கம் அமைப்பு. இருநாளுக்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முதல்முதலாக முயற்சி.

1969, பிப். 4:பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக பதவியேற்பு

1974, நவ. 13: ஐநா சபையில் உரை

1983: பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகம் டூனிஸ் நகருக்கு மாற்றம்

1985, அக். 1: பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகம் மீது நடந்த தாக்குதலில் உயிர் தப்பினார்.

1990, ஆகஸ்ட் 2: குவைத் மீது இராக் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவு; இதனால் வளைகுடா நாடுகளில் பாலஸ்தீனம் ஒதுக்கிவைப்பு

1991 நவ. :28 வயது செயலர் சுஹாவுடன் ரகசிய திருமணம். 1995:முதல் பெண் குழந்தை பிறப்பு

1994, ஜூலை 1: நாடு கடத்தப்பட்டு 26 ஆண்டு முடிந்து முதல் தடவையாக பாலஸ்தீனம் வருகிறார்

1994, டிச. 10:நோபல் பரிசு பெறுகிறார்

2000, ஜூலை 11: இஸ்ரேல் பிரதமர் எகூத் பராக்குடன் 9 நாளாக நடந்த பேச்சு தோல்வி

2001, டிசம்பர் 3: ரமல்லாவில் இஸ்ரேல் தாக்குதல்; அலுவலகத்திலேயே சிறைவைப்பு

ஏப்ரல் 2, 2002: நாட்டை விட்டு வெளியேறுமாறு விடுத்த அழைப்பு நிரகாரிப்பு

அக்டோபர் 27, 2004:கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக பாரிஸýக்கு பயணம்

நவம்பர் 11 2004: பாரிஸ் மருத்துவமனையில் மரணம்

அரபாத்தின் மறைவையடுத்து சர்வதேச புதையல் வேட்டை ஆரம்பமாகும் சாத்தியம்

பலஸ்தீன ஜனாதிபதி யசீர் அரபாத் மறையும் போது அவரது இரகசிய வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் டொலர்களை விட்டுச் சென்றார் என்ற ஊகங் கள் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து அவரது அந்த டொலர்களைத் தேடி சர்வதேச புதையல் வேட்டையொன்று நடைபெறும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

2003 ஆம் ஆண்டு 'போர்ப்ஸ்" சஞ்சிகை வெளியிட்டிருந்த உலகின் முன்னனி செல்வந்த மன்னர்கள், மகாராணிகள், சர்வாதிகாரிகள் பட்டியலில் ஆறாவதாக இடம் பெற்றிருந்தவர் யசீர் அரபாத். அரபாத்திடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்து இருப்பதாக 'போர்ப்ஸ்" மதிப்பிட்டிருந்தது.

கெரில்லா தலைவராக இருந்த போதும் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதியாக பரிணமித்த போதும் அரபாத் தனது நிதி நிலைமைகளை பகிரங்கப் படுத்தியதில்லை.

அரபாத்தின் பல மில்லியன் டொலர்கள் பற்றிய விசாரணைகள் மிக விரைவில் ஆரம்பமாகக் கூடும் என சுட்டிக்காட்டும் அதிகாரிகள் எனினும், குறிப்பிட்ட மில்லியன் டொலர்களை கண்டுபிடிப்பது, சாத்தியமான விடயமா எனக் கேள்வி எழுப்பும் அதே வேளை அவ்வாறு சாத்தியமானால் கூட அதற்கு பல காலம் எடுக்கலாம் என்கின்றனர்.

சுவிட்ஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மைக்கெலைன் காலமி-ரேய் சுவிஸ் வங்கியில் அரபாத்தின் பணம் இருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

யசீர் அரபாத் போன்ற அரசியல் ரீதியாக அதிகம் வெளியுலகிற்கு தெரிந்த ஒரு தலைவரின் பண விவகாரங்களை கையாளும் போது, சுவிஸ் வங்கிகள் மிகக் கடுமையான விதிமுறைகளை கையாள்வதும், மிக அவதானமாக இருப்பதும் வழமை எனவும் சுவிட்ஸர்லாந்தின் வெளி விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன அதிகார சபைக்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், அராபிய நாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் பல நூறுமில்லியன் டொலர்களை அளித்திருந்தன. நலிவடைந்துள்ள பலஸ்தீன பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்காகவே இந்தப் பணம் பெருமளவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

யசீர் அரபாத் ஆடம்பரமற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தமை உலகம் நன்கு அறிந்த விடயங்களில் ஒன்று.

இதன் காரணமாக, அரபாத் இரகசிய வங்கிக் கணக்குகளில் பணத்தை வைத்திருந்தார் என்று கருதும் சிலர், அரபாத்தின் பின் அந்த பணம் காணாமல் போய்விடக்கூடும் என்ற அச்சமும் வெளியிட்டுள்ளனர்.

ஒரு, ஆட்சி மாறும்போதே நீதித்துறையின் தேவை முன்னரை விட அதிகம் தேவைப்படுகின்றது என சுடடிக்காட்டியுள்ள ஜெனிவாவை சேர்ந்த சட்டத் தரணியொருவர், புதிதாக, ஆட்சிக்கு வருவோரை பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலை உருவாகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் இது இயல்பாக நடைபெறும் என அரபாத்தின் விடயத்தை பொறுத்தவரை அது அநேகமாக ஒரு அரசியல் முடிவென்றே கருத வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட, ஆரம்பத்தில் பிரான்ஸ் அதிகாரிகள் சுவிஸ் வங்கிக் கணக்கு களிலிருந்து, பிரான்ஸில் அரபாத்தின் மனைவிக்கு சொந்தமாக உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட 11.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணை யொன்றை, ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகா, பாரிஸிலும், டுனிசிலும் வாழ்ந்து வருகிறார். எனினும், தான் எந்த பிழையும் செய்யவில்லையென அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, பெருமளவு பணம் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப் படுவதை பிழையான தகவல் என மறுக்கிறார் அரபாத்தின் முன்னாள் நீதி ஆலோசாகர், மறைந்த ஜனாதிபதி தனக்கு என்று எதனையும் வைத்துக் கொண்டதில்லை என்கிறார் அவர்.

அரபாத் பெருமளவு பணத்தை மறைத்து வைத்துள்ளார் என்று சொல்பவர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் என சவால் விடும் அரபாத்தின் முன்னாள் நிதி ஆலோசகர் முகமட் ரவிட் அவ்வாறு ஏதாவது பணம் கண்டுபிடிக்கப்பட்டால், அது இஸ்ரேலியர்களினதோ அல்லது அமெரிக்காவினதோ கண்டுபிடிப்பாக இருக்கும் என மேலும் தெரிவிப்பதுடன் அரபாத்திடம் இருந்ததாக குறிப் பிடப்படும் பாரிய தொகையை உலகின் எந்தப் பகுதியிலும் மறைத்து வைக்க முடியாத விடயம் என்கிறார்.

இதேவேளை, ஈராக் ஹெய்டி, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பதவி கவிழ்க்கப்பட்ட, ஆட்சியாளர்களின் சொத்துகளை கண்டுபிடிக்கும் டாணியில் ஈடுபட்ட நிறுவனமொன்றை சேர்ந்த டான்ஸ், கர்சன், இது முற்றிலும் புதிய, வழமைக்கு மாறன நிலை எனத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன அதிகாரசபை, புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு அதில் வெளி திப்படைத் தன்மை பேணப்படுவதற்கான, வாய்ப்புகள் இல்லை என்கிறார் அவர்.

நீதி நடவடிக்கைகள் அனைத்தும் தனியொருவராலேயே மேற்கொள்ளப்பட் டிருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பலஸ்தீன அதிகாரசபையில், ஆரம்பத்திலிருந்தே ஊழல் நிலவியது இதன் காரணமாக, பணம் ஏதாவது காணாமல் போயிருந்தால் அதனை கண்டு பிடிப்பது சாத்தியமில்லாத விடயம் என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர்.

நீதி விவகாரங்கள் தனியொரு நபரினால், அல்லது குழுவினால் கையாளப் படும், நிலை காணப்பட்டால், இது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

இஸ்ரேலிற்கும் பலஸ்தீன அதிகாரசபைக்கு மிடையில் குழப்பகரமான நிலை நிலவிட்டதை கருத்தில் கொள்ளும் போது நிதி நடவடிக்கைகளை கட்டுப் படுத்துவது சாத்தியம் இல்லாமல் இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

எனினும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத போதிலும், காணாமல் போயுள்ள மில்லியன் டொலர்களை கண்டு பிடிக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

எங்காவது ஒரு சிறிய தடமாவது கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.


மறைந்த அராபத்திற்கு இருந்த பல்வேறு முகங்கள்...


பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் புரட்சி வாழ்க்கை முடிந்தது. ஆனால், மரணத்திற்குப் பின் அராபத்தின் மறுபக்கம் பற்றி அதிக அளவில் பேசப்படு கிறது. வாரி வாரி தன் ஆதரவாளர்களுக்கு கரன்சியைக் கத்தை கத்தையாகத் தரும் பழக்கம் கொண்டவர் அராபத்.

யாசர் அராபத் எப்போதுமே நிதியைக் கையாளுவதில் சரியான நடைமுறை இல்லாதவர் என்று அல்குசேன் என்பவர் தற்போது கூறுகிறார். இவர் அராபத் திற்கு வலது கரமாக கடந்த 1996ம் ஆண்டு வரை உடனிருந்தவர். இவரது முழுப் பெயர் ஜாவீத் அல்குசேன். பாலஸ்தீன தேசிய நிதி அமைப்பு என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர். ஆனால், அராபத்துடன் பணியாற்ற முடி யாமல் வெளியேறினார்.

"ஆண்டு ஒன்றுக்கு 6.7 கோடி டாலர் வரை தனியாக அராபத் கையில் ரகசிய மாகப் பணம் வந்து சேரும். இதில், சதாம் உசேனிடம் இருந்து ஒரு சமயம் 5 கோடி டாலர், மூன்று செக்குகளாக வந்ததை நான் பார்த்தேன்' என்றும் அல்குசேன் கூறியுள்ளார்.

குவைத் மீது சதாம் ஆக்கிரமித்ததை அல்குசேன் விரும்பவில்லை. அதற்கு தண்டனையாக அல்குசைனை பிடித்து வீட்டுக் காவலில் வைத்து விட்டார் அராபத். அப்புறம் உடல் நலம் மோசமானதால் ஒருவழியாக அல்குசேன் பிரிட்டனுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அராபத்திற்கு எங்கிருந்து பணம் வந்தது என்றால் , தயக்கமின்றி "அரபு நாடு களிடம் இருந்து தான்' என்றும் கூறியிருக்கிறார். தனக்கு அடிவருடியாக இருப் பவர்கள், மெய்க் காவலர் ஆகியோருக்கு அராபத் இஷ்டப்படி பணத்தை வாரி வழங்கி, அவர்களில் பலர் இப்போது கோடீஸ்வரர் ஆகிவிட்டனர் என்கிறார். அதே போல டெண்டர் விடாமல் பணிகளுக்கு பணப் பட்டுவாடா செய்வதும் அராபத் ஸ்டைல்.

அது மட்டுமல்ல, பல விஷயங்களில் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத சுபாவம் மற்றும் போக்குகளைக் கொண்டவர் அராபத் என்று இப்போது லண்டனில் இருந்த வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன. அவருடன் நெருங்கிப் பழகிய பத்திரிகை நிருபர்கள் கூறியுள்ள சில சுவையான தகவல்கள்:

* இஸ்ரேல் நெருக்கடியில் 41 மாதங்கள் தன் தலைமையகமான ரமலாவில் முடங்கியிருந்தார் அராபத். அதில் அவருக்கு ஏற்பட்ட தளர்ச்சி இறுதிக் காலம் வரை மாறவேயில்லை.

* பாலஸ்தீன இயக்க ஆதரவில் வளர்ந்த "படா இயக்கம்' மற்றும் "அல்அக்சா தியாகிகள் அமைப்பு' ஆகியவை அவர் சொல்படி கடைசியில் கேட்கவில்லை. அதுமட்டுமின்றி, " ஹமாஸ்' என்ற தீவிரவாத அமைப்பு தற்கொலைப் படை தாக்குதலை நிரந்தரமான கொள்கையாக்கி விட்டது. இந்த அமைப்புக்கு ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களின் ஆதரவு கிடையாது.

* அராபத் மனைவி சுஹா ( வயது 41), இவர் பாரீசைச் சேர்ந்தவர். அராபத் நோய்வாய்ப்பட்ட போது வராதவர் கடைசியில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அராபத் செயலராக இருந்து அவர் வாழ்க்கையில் இடம் பெற்றவர். அதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமைத் தழுவினார். காசா பகுதியில் பெரிய வீட்டில் வாழ சுஹா விரும்பினார். கடைசியில் ஒரு வழியாக மூன்று அறை கொண்ட வீட்டைத் தேர்வு செய்து வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. ஆனால் மகளுக்கு தன் தாயின் பெயரான ஜாஹ்வா என்பதைச் சூட்டினார் அராபத்.

* முன்பு துனிஷியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவாக இருந்த அராபத்துக்கு நெருக்கமான சுஹா முற்றிலும் ஆடம்பரமாக வாழ்ந்தவர் . பாரீசில் அவர் வங்கிக் கணக்கில் திடீரென 60 லட்சம் டாலர் ரகசியக் கணக் கில் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக கணவரைப் பற்றிக் கவலைப்படாமல் பாரீசில் உள்ள ஆடம்பர ஓட்டலில் வாழ்ந்தார். அராபத் மகளுக்கு அரபு மொழி தெரியாது. பிரஞ்சு மொழி தான் தெரியும். பிரஞ்சு மொழியில் மகள் பாடுவதை ரசிப்பது உண்டு அராபத். பாலஸ்தீன ஆட்சி மாதம் தோறும் சுஹாவுக்கு 53 ஆயிரம் டாலர் அனுப்பியதாகக் கூறப் படுகிறது. தவிரவும் அராபத்திடம் இருந்து பிரிந்த போது அதிக அளவில் பணத்தை திரட்டிச் சென்றார் சுஹா என்றும் கூறப்படுகிறது.

* இஸ்ரேல் நெருக்கடியில் ரமலாவில் முடங்கிப் போன அராபத் நடவடிக்கை கள் பல புதிர்களாகவே இருந்தன. தன் தலையில் அவர் அணிந்த கட்டம் போட்ட "ஸ்கார்ப்'பைக் கட்டிக் கொள்ளும் விதமே அலாதியானது. வலது பக்கம் தொங்கும் அந்த "ஸகார்ப்' தான் அடைய விரும்பும் "பாலஸ்தீன வரைபடம் ' போலக் கட்டிக் கொள்வதாக அவருக்கு நெருங்கிய பலர் தற்போது விளக்கம் தருகின்றனர்.

*அதே போல வேண்டியவர்கள், நண்பர்கள் மற்ற நாட்டுத் தலைவர்களை உபசரித்து வரவேற்கும் போது கட்டிப் பிடித்து முத்தமிட்டு பாசத்தைக் காட்டு வார் அராபத் . சதாம் உசேனைக் கட்டிப் பிடித்து ஓயாமல் முத்தமிட்டதை அரபு பத்திரிகைகள் எழுதி உள்ளன. அதே போல மாரி கால்வின் என்ற அமெரிக்க பெண் நிருபர் எழுதிய கட்டுரையில், "என்னை அராபத் முத்த மிட்டதை நிறுத் தவே இல்லை. அந்த இக்கட்டான நிலையில், அருகில் இருந்த பாதுகாவலர், ""போதும் , அமர் ,முத்தமிடுவதை நிறுத்துங்கள் '', என்று சொன்னார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியோ பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிட்டு, தான் உருவாக்கிய அமைப்பின் தற்கொலைப் படை செயலை ஒடுக்க முடியாமல் தன் கடைசி மூச்சை விட்டு விட்டார். கொரில்லா தலைவராக இருந்து பின்பு ராஜ தந்திரி யாக மாற முயற்சித்து கடைசியில் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளாத நிலையில் அவரது மரணம் அவருக்கு நெருக்கமான பலரை துயரத்தில் ஆழ்த்தி விட்டது.


யாசர் அரபாத்தின் இறுதிக் கிரியைகள் எகிப்து,கெய்ரோவில் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment