வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 20, 2020

காலை எழுந்தவுடன் தவளை Eat That Frog - பிரெயின் ட்ரெய்சியின் புத்தகம் ஒரு பார்வை.!




இந்த வேலையை நாளை செய்து கொள்ளலாம். இன்று நேரமில்லை. கொஞ்சம் வேலைபளு அதிகமாக உள்ளது. இந்த வேலையை அடுத்த வாரம் செய்து கொள்ளலாம். அய்யோ! இது மிக பெரிய வேலை ஆயிற்றே… இதை முடிக்க இன்னும் ஒரு மாதம் அவகாசமிருக்கிறதே.. கடைசி வாரத்தில் செய்து கொள்ளலாம். இது போன்ற சூழ்நிலைகள் நம்மில் பலருக்கு வருவதும் நாம் வரவழைப்பதும் இயல்பே! இதை procrastination என நேர மேலாண்மையில் அதீத முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறார்கள்.


அதாவது வேலையை ‘ஒத்தி போடுதல்’. தலைவலி, காய்ச்சலை போல நம்மில் பெரும்பாலானோர் இந்த ஒத்திபோடுதல் என்கிற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். மேலை நாட்டு எழுத்தாளர் பிரையன் ட்ரைசியின் ஒத்தி போடுதல் குறித்த புத்தகமான “Eat That Frog” விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

தலைப்பை போலவே வெகு சுவரஸ்யமான புத்தகம். ஒரு தவளையை தின்பதென்பது எவ்வளவு கடினமான விஷயம். அந்த கடினத்தை முதலில் எதிர்கொள்ளுங்கள் என்பதே சித்தாந்தம். ஒருவேளை உங்கள் முன் இரண்டு தவளைகள் இருந்தால் அதில் எது பெரிய தவளையோ அதை முதலில் உண்ணுங்கள் என்கிற இந்த புத்தகம்.
இங்கே தவளை என்பது ஒரு குறீயிடு மட்டுமே. அதாவது எது அதீத கடினமானதோ அதை முதலில் செய்வதன் மூலம் பெறும் நிறைவும், உத்வேகமும் அடுத்து வரிசையிலுள்ள வேலைகளை எளிதில் முடிக்க உதவும். எனவே எதை உங்கள் மனம் அதிகம் நிராகரிக்கிறதோ, எது ஆகப்பெரிய இலக்கோ, நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த முக்கிய பணி எதுவோ அதை முதலில் செய்து முடியுங்கள்.
வேலை பளூ, குறைவான நேரம், உங்கள் மூளையில் அதிகம் இடம்பிடித்து கிடப்பது என எதுவேண்டுமானலும் அந்த ‘கடினத்தை எதிர்கொள்ள’ சவாலாக இருக்கலாம். இந்த வேலையை செய்து முடிக்க வேண்டுமே என்கிற அச்சம். வேலை முடிக்க வேண்டுமே என்கிற பொறுப்புணர்வு கூட சில நேரத்தில் அழுத்தமாக மாறி அந்த வேலையை துவங்க நம்மை தயக்கமுற செய்யலாம். இந்த அச்சமும், அழுத்தமும் அந்த தவளைக்கு உணவாக மாறி நம் கண் முன் இன்னும் பெரிதாக வளர்ந்து நிற்குமே தவிர. அது மறைவதற்கான ஒரே வழி அதை உண்பது, அதாவது அந்த கடினமான வேலையை உடனடியாக செய்து முடிப்பது.
“ஒத்திபோடுதல்’ என்ற இயல்பிலிருந்து வெளியேற சில குறிப்புகள்…
கடினமான சவால் நிறைந்த அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவைகளை முதலில் கையாளுங்கள்.
எதைபற்றியும் அச்சமுறாமல் உடனடியாக துவங்கிவிடுங்கள்.. அந்த வேலையின் பிடி உங்கள் கைகளுக்கு அகப்பட்டுவிட்டால், வேலையின் அலைவரிசை உங்களுக்கு கைவசப்பட்டுவிட்டால்… இத்தனை எளிதானதா இந்த வேலையென நீங்கள் ஆச்சர்யம் கொள்வீர்கள்
உங்கள் பணி சூழலில் இருக்கும் அனைத்து கவனசிதறல்களையும் அப்புறப்படுத்துங்கள். உங்கள் கவனத்தை சிதைக்கும் எதுவும் வேலையை ஒத்திபோட உங்களை ஊக்குவிக்கலாம், அது உங்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும்
சரியான நேரத்தில் உண்டு, உறங்கி முக்கியமாக உடற்பயிற்சி செய்யுங்கள். உளவியல் ரீதியாக அரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் ‘ஒத்திபோடுதல்’ என்கிற விஷயத்தை ஒருபோதும் ஆதரிக்காது. நம் மந்ததன்மையும், பசி மற்றும் தூக்க உணர்வுகள் நம்மை ‘ஒத்தி போடுதலுக்கு’ இழுத்து செல்லும் முக்கிய காரணிகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு வேலைகளை இணையாக செய்கிற போது, ஒரு வேலைக்கும் மற்ற வேலைக்கு இடையே ஒரு வித்தியாசம், புத்துணர்வு, கிடைக்கும். மேலும் ஒரே வேலை செய்கிறோம் என்ற சலிப்பு ஏற்படாது.
எப்போதும் எல்லாம் நம் மனம் ஒத்தி போடுதல் பற்றி எண்ணுகிறதோ.. அப்போது முதலில் இதை துவங்குவோம்.. பின்பு ஒத்தி போடுதல் குறித்து சிந்திப்போம் என்கிற நேர்மறை சிந்தனையை நமக்குள் வளர்த்து கொள்ளுதல் அவசியம். காரணம் ஒருமுறை செய்ய துவங்கிவிட்டால் பின்பு அந்த வேலையே நம்மை வழிநடத்த துவங்கிவிடும். எனவே பெரிய வேலைகளை சிறு சிறு பகுதிகளாக பிரித்து திட்டமிட்டு கொள்ளுங்கள்.
நாம் நினைவில் கொள்ள வேண்டியது இந்த கடினம் என்கிற தவளை ஒரே இரவில் தோன்றியதல்ல அதே சமயத்தில் இது ஒரே சமயத்தில் தீர்ந்துவிட கூடியதும் அல்ல. எனவே அந்த தவளையை(கடினத்தை) எதிர்கொள்வதை புதிய பழக்கமாக கடைபிடியுங்கள்.
இந்த தவளையை நீங்கள் உண்டால், அது உங்களுக்கு அளப்பறிய ஆற்றலையும், சவால்களை, கடினங்களை சந்திக்கிற வல்லமையையும் கொடுக்கும்.
என்ன நண்பர்களே தவளையை உண்ண தயார் தானே?

No comments:

Post a Comment