
சாக்கடலின் மேற்கே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனமும் கிழக்கே ஜோர்டானும் அமைந்துள்ளன. மூன்று புறமும் நிலத்தால் சூழப்பட்ட சாக்கடலுக்கு நீர்வரத்து ஒரே ஒரு வழியாகத்தான் வரும். ஜோர்டான் ஆறு மற்றும் ஓடைகளிலிருந்து நீர் உள்ளே வரும்.
‘சாக்கடல்’ என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் கடல் அல்ல. அது ஒரு உப்பு நீர் ஏரி ஆகும்.
சாக்கடல் மிகத் தொன்மையான ஏரியாகும். சுமார் முப்பத்தேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியில் உள்ள உப்பு நீர் ஏரிகளில் மிக ஆழமானது இதுதான். சாக்கடலின் ஆழம் 997 அடி (304 மீ) ஆகும்.
கடல் மட்டத்திலிருந்து 1407 அடி கீழே தாழ்வாக அமைந்துள்ளது சாக்கடல். இதன் நீளம் 50 கி.மீ., அகலம் 15 கி.மீ. ஆகும்.
இங்கு வருடம் முழுவதும் வெப்பமான காய்ந்த வெப்பநிலையே நிலவும். ஆண்டுதோறும் 50 மி.மீ.க்கும் குறைவான அளவே மழை பெய்யும்.
சாக்கடலின் உப்புத்தன்மை 34.2 சதவீதம். மற்ற கடல்களைவிட இதன் உப்புத்தன்மை 9.6 மடங்கு அதிகம். எனவேதான் இதில் மீன்கள், தாவரம் என்று எந்த உயிரினமும் வாழ முடிவதில்லை.
கூடுதலான உப்புத்தன்மையால் நீரின் அடர்த்தியும் அதிகமாக, அதாவது - 1240 கி.கி./மீ 3 இருக்கும். இது மனித உடலைவிட அதிகமான அடர்த்தியாகும். எனவேதான் சாக்கடலில் நீந்துபவர்கள் அப்படியே மிதக்கிறார்கள்.
சாக்கடலில் நீந்துபவர்கள் மூழ்கி இறக்கவேமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. இங்கே நீந்தும்போது மல்லாக்க படுத்தபடி நீந்தும்வரைதான் பாதுகாப்பு. தற்செயலாக நீங்கள் குப்புறக் கவிழ்ந்து, உப்பு நீர் வாய்க்குள்ளும் நுரையீரலுக்குள்ளும் சென்று மூச்சடைத்துவிட்டால் அவ்வளவுதான்... ஆள் க்ளோஸ்!
சாக்கடலைச் சுற்றிலும் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, பலவகை உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து கணிசமான அளவு ‘பொட்டாஷ்’ (எ) ‘சாம்பல் உப்பு’ எடுக்கப்பட்டு, உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
சாக்கடலுக்கு பெரும் வரலாற்றுப் பின்னணி உண்டு. இக்கடல் ‘அஸ்ஃபால்ட்’ (asphalt) என்னும் நிலக்கீல் உப்பை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும். சாக்கடலின் இந்த நிலக்கீலை பயன்படுத்தி எகிப்திய ‘மம்மி’களைப் பதப்படுத்தினர். எனவே கிரேக்கர்கள் - சாக்கடலை ‘அஸ்ஃபால்டைட்ஸ் ஏரி’ (Lake of Asphaltites) என்று அழைத்தனர்.
கிளியோபாட்ராவுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றாக சாக்கடல் விளங்கியது. இதன் கரைகளைச் சுற்றி உல்லாச விடுதிகளையும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் நிறுவ உத்தரவிட்டாள்.
சாக்கடலுக்கு பைபிளுடன் நிறைய சம்பந்தங்கள் உண்டு. டேவிட் மன்னரின் புகலிடமாக சாக்கடல் விளங்கியதாகக் கூறுவர். அரிஸ்டாட்டில் தன்னுடைய படைப்புகளில் சாக்கடலைப் பற்றிக் குறிப்புகள் எழுதியுள்ளார்.
உயிர்களுக்கு இடமளிக்காத சாக்கடலில் ஏராளமான ஆரோக்கிய குணங்களும் மருத்துவ குணங்களும் ஒளிந்துள்ளன.
இங்கு ஒவ்வாமையை உருவாக்கும் பொருட்கள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. பலவகை தாதுப்பொருட்களின் தாயகம் என்றே சாக்கடலைக் கூறலாம். இங்கு சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மிகக்குறைவாக உள்ளன. சாக்கடல் தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் காற்றழுத்தம் மிகக்குறைவாகக் காணப்படுகிறது. இத்தனை காரணங்களும் சேர்ந்து, சாக்கடலை ஓர் ஆரோக்கிய பூங்காவாக உருமாற்றி உள்ளது.
சாக்கடலில் பல சிகிச்சை முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவை:
Climato therapy - இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மூலம் நோய்களைக் குணப்படுத்துவது.
Helio therapy - சூரிய ஒளி மூலம் சிகிச்சை அளிப்பது.
Thalasso therapy - கடல் நீரில் குளிப்பதன் மூலம் நோய்களைத் தீர்ப்பது.
சாக்கடல் உப்பின் அதீத உவர்ப்புச்சுவை, சோரியாஸிஸ், முகப்பரு, சொறி, படை, பொடுகு போன்ற பலவகை தோல்நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றது. இங்கிருந்து கிடைக்கும் களிமண்ணையும் தாதுப்பொருட்களையும் பயன்படுத்தி ஏராளமான அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
சாக்கடலின் சுற்றுப்புறங்களில் ஒட்டகம், மலையாடு, காட்டு முயல், நரி, குள்ளநரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களும் காணப்படுகின்றன.
உலகின் மிகத் தாழ்வான சாலையான ‘ஹைவே 90’ இங்கு தான் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1289 அடி (393.மீ) கீழே அமைந்துள்ள இச்சாலை மேற்குக் கரை, இஸ்ரேலியக் கரைகளின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது.
சாக்கடலுக்கு வரும் நீர்வரத்து குறைவதால் அதன் நீர் மட்டம் குறைவதாகவும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் சாக்கடல் மாசுபடுவதாகவும் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குங்குமம் முத்தாரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக