May 17, 2020

பிறர் செய்யும் தவறுகளின் பின்னே உள்ள காரணத்தை அறிந்து கொள்வோம்


உங்களுக்கு ஸ்டீபன் கவே என்ற ஆங்கில எழுத்தாளரை தெரியுமா ?.
உலகில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் அவருடைய
"7 habits of effective people " 
"அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்" 
என்ற நூல் இடம்பெற்றுள்ளது. 
அந்த நூலில் இருந்த ஒரு  நிகழ்வை  இங்கே குறிப்பிடுகின்றேன்.
  ஆனால் இது கதையல்ல ஸ்டீபனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .

Stephen covey யும் நம்ம ஊர் பெருசுகளைப் போல காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ஓரு அமேரிக்க பெருசு. வழக்கம்போல நடைப்பயிற்சி முடிந்ததும் ஓர் இருக்கையில் அமர்ந்தார் ஸ்டீபன்.
அப்போது அவர் கண்ட காட்சி....
அடேங்கப்பா! 
மூன்று சிறுவர்கள் முப்பது பேரைப்போல ஆரவாரம் செய்து கொண்டு உள்ளே நுழைகிறார்கள். உடன் அவர்களது அப்பாவும் வருகிறார். வந்தவுடன் வேலை ஆரம்பமானது. Team work என்பதுபோல ஆளுக்கொரு வேலையை கையில் எடுக்கிறார்கள். ஒருவன் பூந்தொட்டியை சிதறடிக்கிறான். ஒருவன் பிறர் படித்துக்கொண்டிருந்த செய்தித்தாள்களை பிடுங்கி கிழித்தெறிகிறான். மற்றொருவன் உயர்தர amplifierகளை விட அதிக சப்தத்துடன் கத்துகிறான். இப்படியாக சில நிமிடங்களில் அந்த பூங்காவையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த கிழவர்களுக்கு கோபம் அதிவேகமாய் பொங்கியது. இத்தனை கலவரங்கள் நடந்தும் அமைதியாகவே ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார் அந்த அப்பா. இது அவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

ஒரு முதியவர் அந்த அப்பாவிடம் சென்று " யோவ்! 
இன்னும் கொஞ்ச நேரத்துல உன் பசங்க இந்த பூங்காவையே இடுச்சுடுவாங்க போலயே . மரியாதையா அவங்கள கட்டுப்படுத்து " என்றார்.திடீரென விழித்துக்கொண்ட அந்த அப்பா அச்சிறுவர்களை அதட்டினார். அவர்களும் சமத்தாக அப்பாவின் அருகே வந்து அமர்ந்து கொண்டார்கள். ஆனால்.... என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. மீண்டும் படுஜோராய் வேலைகள் துவங்கின. புயலுக்குப் பின்னே அமைதி என கேள்விப் பட்டிருப்போம். ஆனால் இங்கோ புயலுக்குப் பின் பூகம்பமே உண்டானது. முன்பை விட இருமடங்கு வேகத்தில் வேலைகள் தொடங்கின. 
ஸ்டீபன் மெதுவாக அந்த அப்பாவின் அருகே சென்று 
"ஹலோ சார்.
என் பெயர் ஸ்டீபன் கவே (Stephen covey).
நான் தினமும் இங்குதான் நடைப்பயிற்சி  செய்கிறேன். இந்த அழகிய பூங்காவை உங்கள் குழந்தைகள் அடித்து நொறுக்குகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துங்கள். இல்லையென்றால் வெளியே நடையைக் கட்டுங்கள் "என்றார்.

மீண்டும் விழித்துக்கொண்ட அந்த அப்பா " சாரி சார். நான் எதாவது செய்து அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். நாங்கள் இப்பொழுதுதான் அருகே இருக்கும் மருத்துவமனையில் இருந்து வருகிறோம். சிறிது நேரத்திற்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். என்னிடம் பணமும் இல்லை. என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவுமில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். என் குழந்தைகளை கூட்டிக்கொண்டு இங்கிருந்து கிளம்பி விடுகிறேன்" என்றார்.

அந்த அப்பாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்பொழுதுதான் ஸ்டீபன் பிறர் செய்யும் தவறுகளின் பின்னே உள்ள காரணம் என்ன என்பதை உணர்ந்தார்.
"என்ன ! 
உங்கள் மனைவி இறந்துவிட்டாரா ?
என்னை மன்னித்துவிடுங்கள். 
நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வருந்தாதீர்கள். 
நான் நிச்சயம் உங்களுக்கு உதவுகிறேன்" என்றார் ஸ்டீபன் .

இப்பொழுது இக்கதையின் கருத்து என்ன என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
இது நமக்கு புதிதல்ல. இதே சூழ்நிலைகளை நாம் தினம் தினம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். 
வீட்டில், அலுவலகத்தில் அனைத்து இடங்களிலும்தான். பிறர் ஏதாவது தவறு செய்துவிட்டால் அவர்களை திட்டி தீர்க்கிறோம். ஆனால் அந்த தவறுகளின் பின் உள்ள காரணங்களை அறிய மறுக்கிறோம். இந்த சூழலில் அவர்கள் செய்யும் தவறை விட நாம் செய்யும் இந்த தவறுதான் மிக கொடுமையானது.

அன்பு தான் ஒவ்வொரு மனிதனின் தாய்மொழி  இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியதுதான் என்ன?.. 
மிகச்சுலபம்..
பிறர் செய்யும் தவறுகளின் பின்னே உள்ள காரணத்தை அறிந்து கொள்வோம். அவர்களை தண்டிக்க வேண்டாம். அன்பை தவிர வேறெதுவும் நம்மிடமிருந்து வெளிப்பட வேண்டாம். 
பிறர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழி செய்வோம். 

"நீங்கள் இவற்றை படித்ததற்கு நன்றி .ஆனால் தயவு செய்து இவற்றை பின்பற்றுங்கள் ."

No comments:

Post a Comment