வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

Nov 12, 2015

வெற்றியின் ரகசியம்..



கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC) அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன்வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான். அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன். தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.
மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

அப்போதுதான் அது நடந்தது. சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார். ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.

ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப்பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது.மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.

சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்: “ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?” “செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல்முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.

“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!” “வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம் ஒன்றும் இல்லை...

மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்...!

No comments:

Post a Comment