வாழ்க்கையில் நாம் உயர்வதும் தாழ்வதும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறை ஒன்றிலே அடங்கியிருக்கிறது.

May 22, 2020

வயது என்பது வெறும் எண்ணிக்கையே அன்றி, மனதிற்கு வயது கிடையாது

அமெரிக்க  நாட்டு தொழிலதிபர், Warren Edward Buffett அவர்கள், தனது வணிகத்தை ஆரம்பிக்கும்போது அவரது வயது 11. ஆனால் Colonel Harland Sanders, என்பவர்,  தனது 65வது வயதிலேயே, KFC (Kentucky Fried Chicken) என்று அழைக்கப்படும், துரித உணவகத்தை ஆரம்பித்தார். இது, உலகிலுள்ள துரித உணவு உணவகங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018ம் ஆண்டின் நிலவரப்படி, 136 நாடுகளில், 22,621 உணவக மையங்களைக் கொண்டிருக்கின்றது. 

Henry Ford அவர்கள், தனது 45 வயதுவரை வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்தவர்.

Hary Potter நூலை எழுதிய J.K.Rowling என்பவர், தனது 30 வயதுவரை உணவுக்கே வழியில்லாமல் இருந்தவர். 

பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டமைப்பான அலிபாபா குழுமத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சீன தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) அவர்கள், தனது 35வது வயதுவரை வெறும் பத்து டாலரை ஊதியமாகப் பெற்றவர். 

எனவே,
வாழ்வில் வெற்றிக்கனியை எட்டுவதற்கு வயது ஒரு தடையே அல்ல. வெற்றி என்பது நம்மில் பிறப்பது. அமெரிக்க இணையதள கோடீஸ்வரரான Drew Houston என்பவர் சொல்கிறார் –
" நீங்கள் எந்த வயதில் இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும், உங்களிடம் இன்னும் நேரமிருக்கிறது. தயங்காது முயற்சி செய்யுங்கள் "என்று. 
இவர், ஏறத்தாழ 220 கோடி டாலர் மதிப்புள்ள தொழில் அமைப்பைக் கொண்டிருப்பவர் என, Forbes இதழ் கூறியுள்ளது.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை. பலர், அதற்காகச் சோர்வடையாமல், அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். மாற்றுத்திறன் கொண்டவர்களும் சாதித்துத்தான் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு திறமையாவது உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும். மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும், அதை விருப்பத்தோடும், ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும். நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார். ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை என்று சொல்கின்றனர். நீங்கள் பந்தயத்தில் ஓடவில்லை. ஒரு தனி வழியில் பயணிக்கிறீர்கள். எனவே மனமுடைந்து போகாதீர்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். நேரம் வரும்போது வெற்றி நிச்சயம் உங்களை வந்தடையும். வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கிகள் கிடையாது. படிக்கட்டுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் ஒவ்வொரு படியாக.. என்றெல்லாம் பெரியோர் சொல்கின்றனர். எனவே,  வாழ்வில் வெற்றிபெறுவதற்கு வயதோ, கல்வித் தகுதியோ, ஏழ்மையோ, மாற்றுத்திறனோ எதுவுமே தடையில்லை. முயற்சிப்போம்.

No comments:

Post a Comment