
மக்கள்தொகைப் பெருக்கம், சமூக மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் காங்கோ தலைநகர் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற இடங்களுக்குப் பரவியது என்கிறது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியூவென் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய ஆய்வு!
பல்வேறு காலகட்டத்திலும் சேமித்து வைக்கப்பட்ட ஹெச்.ஐ.வி. கிருமியின் மரபணுத் தொகுதிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, எது முந்தைய தலைமுறை என்று கண்டுபிடித்துக்கொண்டே போக, அதன் ஆரம்பத் தோற்றம் ஆய்வாளர்களை 1920களின் கின்ஷாஸாவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
அந்நேரம் அந்தப் பகுதியில் நடந்த மிகப் பெரிய மக்கள்தொகைப் பெருக்கம், தடையின்றி பெருமளவில் நடந்த பாலியல் தொழில், விழிப்புணர்வு இல்லாமல் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டது ஆகிய காரணங்களால் அவ்விடத்திலிருந்து மற்ற மற்ற இடங்களுக்கு ஹெச்.ஐ.வி.
பரவியிருந்துள்ளது. தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசாக இருக்கும் நாடு, அந்த நேரத்தில் பெல்ஜியத்தால் ஆளப்பட்ட காங்கோவாக இருந்தது. கின்ஷாஸா நகரம் 1966க்கு முன்பாக லியோபோல்ட்வில் என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அவ்விடத்தில் குறைவாக இருந்ததால், பாலியல் தொழில் அதிக அளவில் நடந்திருக்கிறது.
தவிர அந்த நேரத்தில்தான் அங்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு தூரத்து இடங்களிலிருந்து மக்கள் வந்துபோக ஆரம்பித்திருந்தனர். இதெல்லாம்தான் நோய் பரவக் காரணம் என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் பைபஸ்.
ஹெச்.ஐ.வி. உலகின் கவனத்தை ஈர்த்ததென்பது என்னவோ 1980களில்தான். இதுநாள்வரை இக்கிருமித் தொற்று உலகில் ஏழரைக் கோடி பேருக்கு வந்துள்ளது. ஆனால் ஆப்ரிக்க கண்டத்தில் இந்த நோய்க்கு இதனினும் நீண்ட வரலாறு உள்ளது. ஆனால் குறிப்பாக எந்த இடத்திலிருந்து இந்த நோய் பரவ ஆரம்பித்தது என்பது சம்பந்தமாக பல்வேறு கருத்துகள் இருந்து வருகின்றன.
குரங்குகளிடத்தில் இருந்துதான் இந்தக் கிருமி மனிதர்களுக்குப் பரவியிருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வாறு தாவியிருந்தது. முதலில் ஒருமுறை அப்படி குரங்குகளிடத்தில் இருந்து மனிதனுக்குத் தாவிய ஹெச்.ஐ.வி கிருமியின் ஒரு குறிப்பிட்ட ரகம் கேமரூன் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்திருந்தது. ஆனால் அது உலகம் முழுக்க பரவவில்லை. ஆனால் உலகெங்கிலுமாக கோடிக்கணக்கானோருக்கு பரவியது ஹெச்.ஐ.வி. 1 சப்குரூப் எம் என்ற ரகம்தான்.
பரவுவதற்கு ஏற்ற சமூக சூழல் வரும்போது கிருமியின் குறிப்பிட்ட ஒரு ரகம் உலக நோயாக உருவெடுக்கும் என்ற படிப்பினையாக அமைந்துள்ள இந்த ஆய்வு, தற்போது மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் எபோலா போன்ற கிருமிகள் உலக நோயாகப் பரவுவதை தடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!
No comments:
Post a Comment